டொராண்டோ: கனடாவில் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பிரதமராக இருந்து வந்த லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், உட்கட்சியிலும் அதிருப்திகள் அதிகரித்தன. இதனால் அவர் பிரதமர் பதவியை கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து புதிய பிரதமராக மார்க் கார்னி (59)பதவியேற்றார். வரும் அக்டோபர் வரை பதவிக்காலம் உள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், பிரதமர் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியை எதிர்த்து பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி போட்டியிட்டது. கனடா நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 343 இடங்களில் பெரும்பான்மையை பெற 172 இடங்கள் தேவை. இதில், கார்னியின் லிபரல் கட்சி 167 இடங்களுடன் வெற்றியை நெருங்கியது. கன்சர்வேடிவ் கட்சி 145 இடங்களில் மட்டுமே வென்றதால் பியர் பொய்லிவ்ரே தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால், பிரதமர் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
கார்னிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்ரூடோ ஆட்சிக் காலத்தில் காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா-கனடா உறவு சீர்குலைந்த நிலையில் புதிய பிரதமர் கார்னி ஆட்சியில் அது சீராகும் என இந்தியா நம்புகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு எனது வாழ்த்துக்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என கூறி உள்ளார்.
* டிரம்ப்பை வெளுத்து வாங்கிய கார்னி
கனடா மீது அதிகமான வரிகளை விதித்தது மட்டுமின்றி அந்நாட்டை அமெரிக்காவின் 51வது மாகாணமாக டிரம்ப் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் டிரம்ப் மீது கனடா மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களிடம் வெற்றி உரையாற்றிய கனடா பிரதமர் கார்னி, ‘‘வரும் நாட்கள் நமக்கு மிகவும் சவாலானவை. அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்கிறோம்.
அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டு விட்டோம். ஆனால் அந்த துரோகம் கற்றுத்தந்த பாடத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது. அமெரிக்கா நமது நிலம், வளம், நீர், நாடு என அனைத்தையும் விரும்புகிறது. நம்மை சொந்தமாக்கிக் கொள்ள டிரம்ப் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்பதை உலகிற்கு காட்டுவோம்’’ என்றார்.
* தமிழர் அனிதா ஆனந்த் ஹாட்ரிக் வெற்றி
கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பதவி வகித்த அனிதா ஆனந்த் இம்முறை ஓக்வில் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று மீண்டும் எம்பியாகி உள்ளார். ஏற்கனவே இத்தொகுதியில் 2019, 2021ல் 2 முறை வென்ற அனிதா ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். எனவே அனிதாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது தந்தை சென்னையைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாபி. இம்முறை கனடா தேர்தலில் 65 இந்திய வம்சாவளிகள் போட்டியிட்டனர். அனைவரும் பஞ்சாப்பை பஞ்சாப்புடன் தொடர்புடையவர்கள். இதில் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 18 பஞ்சாபிகளும், 2019ல் 20 பஞ்சாபிகளும் வென்றது குறிப்பிடத்தக்கது.
* காலிஸ்தான் தலைவர் படுதோல்வி
கனடா நாடாளுமன்ற தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார். பர்னபி சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெறும் 9100 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவரது கட்சி வெறும 7 தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று புதிய ஜனநாயக கட்சி தலைவர் பதவியை ஜக்மீத் சிங் ராஜினாமா செய்தார்.
* இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி
கனடா தேர்தலில் 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதில் ஹரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ் பார்க் தொகுதியிலும், பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் ஜுனிதா நாதன் வெற்றி பெற்றுள்ளனர்.
The post பொதுத்தேர்தல் முடிவு அறிவிப்பு கனடா பிரதமர் கார்னியின் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.