
கோவை,
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இன்று இயக்கப்படாது என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி தென்காசியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் பஸ்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை.
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழ்நாடு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு பஸ்கள் கேரள எல்லையான களியக்காவிளை வரை இயக்கப்பட்டு வருகின்றன.
இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.