
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"" என்று 2021 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. தி.மு.க.வின் ஆட்சியே முடிவடையும் தருவாயில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. இதுதான் "சொல்வதை செய்வோம்"என்பதற்கு இலக்கணம் போலும்.
மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை ஈட்டும் தி.மு.க. அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையினை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்திருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார .