
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், காப்பருக்கு 50 சதவீதம், மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் என புதிய வரிகளை விதித்துள்ளார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பேராபத்து அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புகளால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது.
இந்தியாவுக்கான மருந்து பொருட்கள், காப்பர் மற்றும் காப்பர் பொருட்களுக்கான மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்து வருகிறது.
2024-25 நிதியாண்டில் உலக அளவில் 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான காப்பர் மற்றும் காப்பர் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதில், அமெரிக்காவுக்கு 36 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு (17 சதவீதம்) ஏற்றுமதியானது. சவுதி அரேபியா (26 சதவீதம்) மற்றும் சீனாவுக்கு (18 சதவீதம்) அடுத்து 3-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது.
எரிசக்தி, உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்புக்கு முக்கிய தாதுபொருளாக, இந்த காப்பர் உள்ளது. இதேபோன்று, 2025-ம் நிதியாண்டில் 980 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்து பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது. கடந்த ஆண்டில் இது 810 கோடியாக இருந்தது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் ஆகும்.
இந்த சூழலில், 200 சதவீதம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. எனினும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா ஈடுபட்டு உள்ளது. அனைத்து பிரிவு வரிகளும் இதில் சேரும் என பார்க்கப்படுகிறது.
அந்த வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்டு 1-ந்தேதிக்குள் இறுதி செய்யப்பட்டால், டிரம்பின் புதிய வரி விதிப்புகளால் இந்திய சந்தையில் பெரிய பாதிப்புகள் இருக்காது என கூறப்படுகிறது.