*கூட்டுறவு இணைப்பதிவாளர் வலியுறுத்தல்
ஊட்டி : நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் தோடர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஊட்டி கார்டன் மந்து கிராமத்தில் உறுப்பினர் கல்வித்திட்டம் நடந்தது.
நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து பேசுகையில், இச்சங்கத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், தமிழ்நாட்டிலே இதுபோல் எங்கும் இல்லாத அளவிற்கு நீலகிரி மாவட்டத்தில் தனியே தோடர் எனும் பழங்குடியின சமூக மக்களுக்கென இச்சங்கம் 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் மூலமாக இம்மக்கள் தங்களின் கைவினை தையல் செய்து ஆதாயம் பெறும் வகையில் சங்க வளாகத்தில் தோடர் பாரம்பரிய கை எம்பிராய்டரி தயாரிப்பு மற்றும் விற்பனை மையம் அமைந்துள்ளது. மேலும் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் சிறு, குறு கடன்கள் பெற்று பல்வேறு மக்கள் துயரடைகின்றனர். கடன் பெற்றவர்களை கண்ணியமான முறையில் இந்நிறுவனங்கள் நடத்துவதில்லை.
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இத்தகைய துயரத்தினை அடைய கூடாது என்பதற்காகவே கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் பெரும்பாலான மக்கள் கூட்டுறவு சங்கங்கள் குறித்த விழிப்புணர்வு இன்றி தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று துயர் அடையும் நிலை பெருகி வருகிறது. இந்த நிலையை மாற்றி அமைத்திடவே ஒவ்வொரு கிராமம் தோரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வித்திட்டம் வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.
கூட்டு வட்டி என்ற கொடிய வட்டி முறையில் சிக்காமல் கூட்டுறவு சங்கங்களில் தனிவட்டி முறையில் உறுப்பினர்கள் கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அய்யனார் கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் குறித்தும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு செயலி குறித்தும் அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உதவியாளர் பாபு விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக பூவ்நிலா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சங்கத்தலைவர் ராஜன், சங்க உறுப்பினர்கள் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சங்கத்தின் எழுத்தர் ஹேமலதா நன்றியுரை கூறினார்.
The post பொது மக்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று பயன்பெற வேண்டும் appeared first on Dinakaran.