பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

3 months ago 25

சென்னை: பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பகுதிகளில், சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றப்படாமை போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சென்னை மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டினை மேம்படுத்தவும், கடந்த ஐந்து வருடங்களாக அமலில் உள்ள அபராத தொகையானது திருத்தியமைக்கப்படுகின்றன.

எனவே, இனி வரக்கூடிய நாட்களில் உயர்த்தப்பட்ட அபராத தொகையை செயல்படுத்துவதன் மூலம் சட்ட விரோதமாக பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாட்டு கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றப்படாமை போன்ற விதிமீறல்கள் வெகுவாக குறைக்கப்படுவதுடன் சென்னை மாநகரம் தூய்மையாக பராமரிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாக வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு மாநகராட்சிக்கு உறுதுணையாக இருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிடவும், தங்கள் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு குப்பையை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்கிடவும், ஒவ்வொரு மண்டலத்திலும் கட்டிடம் மற்றும் கட்டுமானக் கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கொட்டவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article