கூடலூர், மே 25: பருவ மழையின் தீவிரம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக கூடலூரில் மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம் அமைத்துள்ளனர். கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடரும் மழை காரணமாக மிகவும் குளிர்ச்சியான காலநிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புகளின் போது பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக கூடலூருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் இருந்து கூடலூர் வந்துள்ள 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான மீட்பு கருவிகளுடன் கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிப்பு கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் 24 மணி நேரத்தில் கூடலூர் 33, மேல் கூடலூர் 38, தேவாலா 84, செலுமுள்ளி 48, பாடந்துறை 52, ஓவேலி 55 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
The post மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம் appeared first on Dinakaran.