கூடலூர், மே 25: முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வனக்கோட்டம் மற்றும் கூடலூர் வனக்கோட்ட வனப்பகுதிகளில் வருடாந்திர யானைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. இப்பணிகள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
யானைகளின் எண்ணிக்கை மற்றும் நடமாட்ட முறைகளை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகளில், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பிற கள ஊழியர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை நேரடியாகவும், மறைமுக முறைகளை பின்பற்றியும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நாள் நடைபெறும் யானைகள் கணக்கெடுப்பில் தீவிர தரை ரோந்து, டிரோன் கேமரா கண்காணிப்பு, நீர் நிலைகள் மற்றும் அறியப்பட்ட யானைகளின் பாதைகளில் இருந்து தரவு சேகரிப்பு ஆகியவையும் அடங்கும். வனத்துறையில், எதிர்கால பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பது, மனித-வன விலங்கு மோதல் தடுப்பை நிர்வகிப்பது, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற முக்கியமான பணிகளை மேம்படுத்தும் வகையிலும் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வனத்துறை கணக்கெடுப்பு பணியில் தென்பட்ட காட்டு யானைகள் appeared first on Dinakaran.