பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாகும்: முத்தரசன் குற்றச்சாட்டு

1 week ago 1

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டி, தமிழ்நாட்டில் சாலைகளில் ஊர்வலம் செல்வதையும், முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது போன்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இப்போது, பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என்பதும், அப்படி இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதும், அபராதம் விதிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.

இத்தகைய எதிர்மறை கண்ணோட்டம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் உத்தரவு மறுபரிசீலனை செய்து, திருத்தப்பட வேண்டிய தீர்ப்பாகும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளின் ஜனநாயக செயல்பாடுகளை உறுதி செய்ய, மதுரைக் கிளை நீதிமன்ற உத்தரவின் மீது மேல்முறையீடு செய்து, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு சட்டம் நிறைவேற்றி, அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாகும்: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article