தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: விளாங்குடியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, ஜாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றவும், கட்சியினர், அமைப்பினர் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தும், அதுவரை இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.