
தமிழ்நாட்டில் இப்போது புதிது, புதிதாக கட்சிகள் உதயமாகும் கலாசாரம் தோன்றிவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதற்கு முன்பே கொடிகள் உருவாகிவிடுகிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு முன்பே கட்சி கொடிகளை கொள்கைரீதியாக வடிவமைத்துவிடுகிறார்கள். கட்சி கொடிகளை அவர்களின் கட்சி அலுவலகத்தில், கட்சிக்கு சொந்தமான இடங்களில், கட்சிக்காரர்களின் வீடுகளில் பறக்கவிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் சாலையோரங்கள், பஸ் நிலையங்களின் முகப்புகள் என மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களிலும் கம்பத்தை நட்டு வைத்து கொடிகளை பறக்கவிட்டுவிடுகிறார்கள்.
இப்போது யாருடைய கொடி அதிக உயரத்தில் பறக்கிறது என்பதில்தான் கட்சிகளுக்கிடையே போட்டா போட்டி நிலவுகிறது. கொடி கம்பத்தை வெறும் தரையில் நடுவதோடு விட்டுவிடுவதில்லை, அதற்காக ஒரு மேடை கட்டி அதில் கல்வெட்டு அமைத்து, யார் அந்த கம்பத்தை நிறுவியது, யார் அதை பறக்கவிட்டது என்பதோடு அந்த பகுதி கட்சி நிர்வாகிகளின் பெயரும் பொறிக்கப்படுகிறது. இதுதவிர ஏதாவது கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தாலோ, தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவுநாள் வந்தாலோ புதிது, புதிதாக ஏராளமான கொடி கம்பங்களை நட்டுவிடுகிறார்கள்.
நடைபாதைகளில் கொடி கம்பங்கள் நடப்படுவதால் மக்கள் நடந்துசெல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு கட்சி கொடி கம்பத்தை நட்டால் அதன் அருகிலேயே பிற கட்சிகளும் கொடி கம்பங்களை நடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கட்சிகள் மட்டுமல்லாமல் மதங்கள், சாதி அமைப்புகளுக்கும் இப்போது தனித்தனியாக கொடிகள் இருக்கின்றன. அவற்றின் கொடி கம்பங்களும் இதுபோல பொதுஇடங்களில்தான் வான் நோக்கி நிறுத்தப்படுகின்றன. ஒரு சாதி அமைப்பு தனக்கென்று ஒரு கொடி அமைத்துவிட்டால் போட்டிக்காக அடுத்த சாதியும் கொடிகளை உருவாக்கிவிடும் கலாசாரம் அதிகரித்துவிட்டது.
கொடி கம்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் வைத்தால் யாரும் பெரிதுபடுத்தமாட்டார்கள். பொதுஇடங்களில் வைப்பதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. இப்போது சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மிக நல்ல ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். " பொதுஇடங்களில் அமைக்கப்படும் கொடி கம்பங்கள் ஆக்கிரமிப்பாகும். இவ்வாறு சாலைகள், தெருமுனைகள், பூங்காக்கள் முன்பு அமைக்கப்படும் கொடி கம்பங்களால் போக்குவரத்துக்கு தடை ஏற்படுவது மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு இடையே தேவையற்ற மோதல்களும் ஏற்படுகிறது. பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
எனவே அனைத்து கட்சிகள், சாதிகள், மத அமைப்புகள் பொதுஇடங்களில் நட்டுள்ள கொடி கம்பங்களை அடுத்த 12 வாரங்களுக்குள் அவர்களே அகற்றிவிடவேண்டும். அகற்றாதபட்சத்தில் அதிகாரிகளே 2 வாரகால அவகாசத்துக்கு நோட்டீசு கொடுத்து அகற்றவேண்டும். அதற்கான செலவை கொடி கம்பங்கள் அமைத்தவர்களிடமே வசூலித்துக்கொள்ளவேண்டும். அரசியல் கட்சிகளும் மற்ற அமைப்பினரும் அனுமதி வாங்கி, தங்கள் சொந்த இடத்தில் கொடி கம்பங்களை நட்டுக்கொள்ளலாம். மாநில அரசு இதுபோல சொந்த நிலங்களில் கொடி கம்பங்கள் நடுவது தொடர்பாக விதிகளை உருவாக்கவேண்டும்" என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகமாக கொடி கம்பங்களை நட கட்டணம் வாங்கி நிலத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு இப்போது ஏற்படும் இடையூறுகள் இந்த தீர்ப்பால் அகற்றப்படும். அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பொதுமக்களின் இன்னல்களை போக்க எடுக்கவேண்டிய நடவடிக்கையை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சமூக அக்கறையோடு கையில் எடுத்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்