
சென்னை,
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி நள்ளிரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் போலீசிடம் கல்லூரி மாணவர் ஒருவர் சங்கிலி பறித்ததுடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மாணவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் ரெயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோத செயல்கள் ஏற்படாத வகையில் தடுக்கவும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில்நிலைய நடைமேடை மட்டுமின்றி சுரங்கப்பாதை வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரெயில் பயணிகளை தவிர்த்து நடைமேடைகளில் சுற்றித்திரிபவர்களை விசாரணை செய்து எச்சரிக்கின்றனர்.