
சென்னை,
சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இந்த படத்தில் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், கவுண்டமணி நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
அரசியல்வாதி கவுண்டமணி தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கி தோற்றதால் ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். மனைவி மற்றும் மூன்று தங்கைகளுடன் வசிக்கும் அவர் தனது தங்கைகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாப்பிள்ளைகளுக்கே மணமுடித்துக் கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவருடைய தங்கைகளோ வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை காதலித்து அண்ணன் சம்மதத்தை பெற காதலர்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நடிக்கச் சொல்கிறார்கள்.
அந்த சமயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட கவுண்டமணிக்கு கட்சித் தலைமை சீட் கொடுக்காததால் சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா? தங்கைகளை அவர்களின் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தாரா? என்பது மீதி கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மறுபிரவேசம் செய்து இருக்கிறார். அவருடைய டிரேட் மார்க் டைமிங் காமெடி, பஞ்ச் டயலாக், காட்சிகளுக்கு ஏற்ப முக பாவங்கள் என தன்னை பழைய கவுண்டமணியாகவே வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார். முதுமையிலும் அவர் காண்பிக்கும் திரை ஆளுமை வியக்க வைக்கிறது.
யோகி பாபு ரசிகர்களை ஏமாற்றாமல் சிரிக்க வைக்கிறார். இளம் கதாநாயகர்களாக வரும் வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் ஆகியோர் ஆர்வத்தோடு நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார்கள். சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, வையாபுரி, ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், நான் கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ராயன், சாய் ராஜகோபால், மணவை பொன் மாணிக்கம் என அனைவரின் நடிப்பிலும் நேர்த்தி.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் காத்தவராயன் காமெடி கதையை கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் அழகாக படம் பிடித்துள்ளார். நாடகத்தனமான காட்சிகள் பலவீனம். லாஜிக் பார்க்காமல் காமெடி படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சாய் ராஜகோபால்.
