தென்காசி: குற்றாலத்தில் பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மூன்று தினங்களாக அவ்வப்போது தூறல் விழுவதால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் நன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறை காரணமாக பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. ஏற்கனவே கடந்த மூன்று தினங்களாக குற்றாலம் பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது. பகல் வேளையில் வெயில் இல்லை. அவ்வப்போது சற்று தூறலும் லேசான மழையும் பொழிகிறது.
இதமான சூழல் மற்றும் தூறல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும் சிறிதளவு அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் ஓரளவு நன்றாக தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் ஓரளவு தண்ணீர் நன்றாக வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்புகின்ற பக்தர்களும் குற்றாலம் வருகை தருகின்றனர். சபரிமலை சீசன் நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே கோவிலில் நடை திறந்திருக்கும் என்பதால் விடுமுறையை பயன்படுத்தி பலரும் சபரிமலை கோவிலுக்கு செல்லுகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்களு குற்றாலத்தில் நீராடிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.