பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அவதி

6 hours ago 2

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வசிக்கும் பலர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் என்பதால் தமிழக அரசு சார்பில் கடந்த 10 முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். நாளையுடன் விடுமுறை முடியவுள்ள நிலையில் சென்னை நோக்கி மக்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர். இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கும், பிற முக்கிய நகரங்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அதிகப்படியான மக்கள் சென்னை திரும்ப உள்ளதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

திருச்சி, கோவை, நாகை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்னி பேருந்துகள் முன்பதிவு செய்யும் செயலிகள், இணையதளங்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு தீர்வுக்காண தமிழக போக்குவரத்து துறை, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயித்தனர். அவர்கள் நிர்ணயித்த கட்டணம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிவந்த நிலையில் தற்போது பண்டிகை கால மக்களின் தேவையை வைத்து இன்னும் கூடுதலாக சில ஆம்னி பேருந்துகள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்ல படுக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,150 ஆக நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல நெல்லையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படுக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,810 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,600 முதல் ரூ.4,000 வரையும், இருக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3000 வரையும், திருச்சியில் இருந்து படுக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.1,680 ஆக நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது ரூ.2,500 முதல் ரூ.3,500 வரையும், இருக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து படுக்கை வசதியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,460 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.2,800 முதல் ரூ.3,500 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,330 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.2,000 முதல் 4,000 வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர். பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

The post பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article