சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஜனவரி 3ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பை பெறுவதற்கு ஜனவரி 3ம் தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று தெரிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கனில், குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதியில், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளது.
டோக்கன் வழங்கப்படும் 3ம் தேதி அன்று, பாங்கல் பரிசு தொகுப்பு நகர்வு செய்தல் பணியும் நடைபெறும். இதைத்தொடர்ந்து, ஜனவரி 9ம் தேதி முதல் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் உள்ளிட்டவைகளை தெளிவாக டோக்கனில் குறிப்பிட்டு வீடு வீடாக சென்று வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* விடுமுறை கிடையாது
வருகிற 3ம் தேதி டோக்கன் விநியோகம் மற்றும் 10ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்க உள்ளதால் அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 15ம் தேதி (புதன்) மற்றும் 22ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்: வரும் 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும் appeared first on Dinakaran.