பொங்கல் பண்டிகையையொட்டி ரேக்ளா பந்தயத்துக்கு காங்கயம் காளைகள் தயார்: ஏற்பாடுகள் தீவிரம்

4 hours ago 2

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்துக்கு காயங்கயம் இன காளைகளுக்கு பயிற்சி அளித்து, விவசாயிகள் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் ரேக்ளா பந்தயம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரேக்ளா பந்தயத்திற்கான தடை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இருந்ததால் சுற்று வட்டார பகுதியில் ரேக்ளா பந்தயம் குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது காங்கயம் இன காளைகளை பாதுகாப்பது மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தடையை மீறி சில இடங்களில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு வந்தன. அதன்பின், ரேக்ளா பந்தயம் நடத்த அரசு மீண்டும் அனுமதி அளித்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர்ந்தனர்.

இந்நிலையில், வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி கிராம பகுதிகளில் ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது. இதற்காக, விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ரேக்ளா பந்தயம் நடத்தவதற்காக, காங்கயம் இன காளைகளை தயார்படுத்தி, அதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமமட்ட பாதை ரோட்டில் மாடுகளை பூட்டி குறிப்பிட்ட தூரம் விரைந்து சென்று பயிற்சி எடுக்கின்றனர். மேலும், காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், சகதிகளில் முட்டுவது போன்ற பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ரேக்ளா பந்தயம் நடத்தவதற்காக, அந்த பகுதி விவசாயிகள் ரோடுகளை தேர்வு செய்து, பழுதான ரோடுகளை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காளைகளை தயார்படுத்தும் விவசாயிகள் கூறுகையில்,“ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன.

ரேக்ளா பந்தயங்களுக்கு காங்கயம் காளைகள் மட்டுமே புகழ் பெற்றவை. இதுபோன்று ரேக்ளா பந்தயங்களுக்காக போட்டி போட்டுக்கொண்டு காளை மாடுகளை வாங்குவதால் காங்கயம் இன காளைகள் அழியாமல் தடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி, உடுமலை, ஈரோடு, தாராபுரம், திருப்பூர், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரேக்ளா பந்தயங்கள் விமர்சையாக நடத்தப்படுகின்றன. தற்போது, ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான தடை என்பது இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களில் ரேக்ளா பந்தயம் எந்தவித தடையின்றி நடக்கிறது. இந்தாண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காங்கயம் இன காளைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர உள்ளோம். இதற்காக, காங்கயம் இன காளைகளை தயார்படுத்தி, ரேக்ளா பந்தயத்தில் வெற்றிபெற பயிற்சி தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றனர்.

The post பொங்கல் பண்டிகையையொட்டி ரேக்ளா பந்தயத்துக்கு காங்கயம் காளைகள் தயார்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article