நாகப்பட்டினம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பொங்கல் (2024) பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.
இத்தகைய சூழலில் தான் இந்த பொங்கலுக்கும் (2025) தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்: கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.