போலீசை மிரட்டிய மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 hours ago 2

‘‘ஒன்றிய ஆளும் கட்சி மாவட்ட தலைவர் பதவிக்கு வர பாக்ஸ் பாக்ஸாக சுவீட் பாக்சுடன் நிர்வாகிகளை சுற்றிசுற்றி வர்றாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சியின் மன்னர் மாவட்ட வடக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு மூன்று பேர் கிழக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் நிர்வாகிகள் தங்கள் பக்கம் வாக்கு செலுத்த வேண்டி அவர்களின் வீட்டிற்கு சென்று சுவீட் பாக்ஸ்கள் கொடுத்ததாக தகவல் வெளியானது.

தலைவர் பதவிக்கு தேர்தல் முடிந்தும் வெற்றி தோல்லி அறிவிக்காமல் வாக்குபெட்டியை கமலாலயம் எடுத்து சென்றுவிட்டாங்களாம்.. இதனையடுத்து போட்டியாளர்களை அழைத்து கமலாலயம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க.. ஆனால் முடிவு எட்டாமலே பேச்சுவார்த்தை முடிச்சிட்டாம்.. இதனையடுத்து எம்ஜிஆர் பெயர் கொண்டவரும் முருகன் பெயரை கொண்டவரும் மாநில தலைமையை சரிகட்ட பெரிய சுவீட்பாக்சுடன் சுற்றி வருவதாகவும் எப்டியும் காரியத்தை சாதித்து விடுவார்கள் என்ற தகவலையும் அவரவர் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறாங்களாம்..

இன்றோ நாளையோ முடிவு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், எது எப்படி இருந்தாலும் சுவீட் பாக்ஸ் வெற்றி பெற போகிறது என நடுநிலை கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘எங்களுக்கான காலம் வரும்.. காலம் வந்ததும் உங்களை எல்லாம் விரட்டுவோம் என சகட்டுமேனிக்கு கொந்தளிச்சாராமே தெர்மாகோல் புகழ் மாஜி..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியின் மாஜியான தெர்மாகோல் சமீபத்தில் தனக்குச் சொந்தமான தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாமை அரசு பள்ளியில் நடத்த திட்டமிட்டாராம்.. ஆனால், பள்ளியில் நடத்த அனுமதி தரப்படவில்லையாம்..

இதனால் கோபமடைந்த தெர்மாகோல், கண்டபடி பள்ளியையும், காவல்துறையையும் திட்டித்தீர்த்தாராம்.. திரும்பவும் தற்போது கட்சியின் நிறுவன தலைவரின் பிறந்த தினத்திற்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பதாகக் கூறி, மேடையிலேயே ‘போலீஸ் பல்வேறு நிபந்தனைகள் விதித்து மிரட்டுகிறது. ஊருக்குள் இருக்கும் அத்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களையும் நான் எச்சரிக்கிறேன். எங்களிடம் மோதாதீர்கள். எங்களை மிரட்டினால், எங்களுக்கான காலம் வந்ததும் உங்களை விரட்டுவோம்.

இங்கே நாங்கள் போராடினால், தமிழகமே கொந்தளிக்கும். ஆமாம் சொல்லிப்புட்டோம்’ என்று போலீசை சகட்டுமேனிக்கு உணர்ச்சிகரமாக மிரட்டிப் பேசினாராம்.. இது போலீசை மட்டுமல்ல, பொதுமக்களையும் முகம்சுளிக்கச் செய்திருக்கு.. ‘சட்டம் -ஒழுங்குக்கு கட்டுப்பட்டு கூட்டம் நடத்திட்டு போக வேண்டியதுதானே? இந்த மனுஷன் ஏங்க தேவையில்லாம பொதுவான விஷயத்துக்கெல்லாம் போலீசை மிரட்டிப் பேசணும்? கண்டபடி கூட்டத்தை சேர்த்து கூட்டம் நடத்தி பொதுமக்களை சிரமப்படுத்தினா கட்சிக்குத்தானே கெட்ட பேரு? யாரு சொல்றதுலயும் நியாயத்தைப் பார்க்காம, எல்லாத்தையுமே எதிர்க்கணும்னா எப்படிங்க?’ என்று சக கட்சியினரே அவர் காதுபட கேள்விக்குரல்களை எழுப்பிச்சென்றதையும் கேட்க முடிந்தது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஐந்து மாதமா எந்த வேலையும் இல்லாமல் சம்பளம் மட்டும் வாங்கிக்கிட்டு இருக்கிறாராமே புதுச்சேரி செயலர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் பிசிஎஸ் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியவர் சுந்தரமானவர், பல்வேறு துறைகளில் இயக்குநர் பொறுப்பையும் வகித்து வந்தார். இவர் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற பிறகு, அருணாசல பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ் பேசும் அதிகாரி என்பதால் முக்கிய இலாகா ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் தலைமை செயலகம் வந்தார். ஆனால் கடந்த 124 நாட்களாக அவருக்கு எந்த அரசு துறையும் ஒதுக்கப்படவில்லை. தினமும் செயலகம் வருவார், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்வார், மாலை வீடு திரும்புவார். கடந்த ஐந்து மாதங்களாக அவருக்கு வேலை கொடுக்காமல் அரசு சம்பளம் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே உள்ள 18 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் துறைகள் போதுமானதாக இருப்பதால் கொடுக்கப்படவில்லையா அல்லது தலைமை செயலர் சவுகான், தனக்கு பிறகு ஆக்டிங் தலைமை செயலராக இருக்கும் மாதவனிடம் இருந்து அதிக துறைகளை பிரித்து கொடுக்க மனமில்லையா என தலைமை செயலக வட்டாரங்களில் முணுமுணுப்பு எழுந்துள்ளதாம்.. சுந்தரமானவருக்கு தலைமை செயலர் துறைகள் ஒதுக்காததன் காரணம் என்ன என்பது அந்த புல்லட்சாமிக்குத்தான் வெளிச்சம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காட்டன் சூதாட்டத்தை தடுக்க காக்கிகள் நடவடிக்கை எடுப்பார்களா என வெயிலூர் மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் தொடர்ந்து நடப்பதால் ஆட்டோ டிரைவர்கள், நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுறாங்க.. காட்டன் சூதாட்டம் பற்றி செய்தி வந்தால், வெறும் ஏஜென்ட்களை மட்டுமே கைது செய்து கோர்ட்டில் போலீசார் நிறுத்துறாங்களாம்..

ஆனால் பெரிய அளவில் செய்தி வெளியானதால் சென்னை காக்கி தலைமையகம் வரை அது எதிரொலித்ததும் குயின் பேட்டை, மிஸ்டர் பத்தூர் மாவட்டங்களில் காட்டன் சூதாட்டம் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகி விட்டாங்களாம்… அதேபோல் வெயிலூர் மாவட்டத்தில் ஓரிருவர் மட்டுமே அடக்கி வாசிக்கும் நிலையில் கசப்பான பகுதியிலும் பிரபல மருத்துவமனை உள்ள ஏரியாவிலும் என இரண்டு பேர் உள்ளூர் காக்கிகளின் ஆசீர்வாதத்துடன், காட்டன் சூதாட்டம் தொடர்ந்து நடந்து வருதாம்..

இந்த விஷயத்தில் வடக்கு மண்டல காக்கி உயர் அதிகாரி தனது ரகசிய கண்காணிப்பை வெயிலூர் மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறாராம்.. இப்போதாவது காட்டன் பேர்வழிகளிடம் கரிசனம் காட்டாமல் காக்கிகள் தங்கள் கடமையை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் வெயிலூர் மாவட்ட மக்கள் காத்திருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post போலீசை மிரட்டிய மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article