பொங்கல் பண்டிகை: நெல்லை, குமரிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

2 days ago 1

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு படை எடுப்பர்.

இதன் காரணமாக, ரெயில்கள் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

1. தாம்பரம்-கன்னியாகுமரி

தாம்பரம்-கன்னியாகுமரி இடையே (வண்டி எண்-06093) வருகிற 13-ந்தேதி 20 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கமாக, கன்னியாகுமரி-தாம்பரம் இடையே (வண்டி எண்-06094) வருகிற 14-ந்தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில், கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

2. சென்டிரல்-நாகர்கோவில்

சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே (வண்டி எண்-06089) வருகிற 12, 19-ந்தேதிகளில் 22 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், சென்டிரலில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, கரூர், மதுரை, நெல்லை வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து (வண்டி எண்-06090) வருகிற 13, 20-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில், இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணி்க்கு சென்டிரல் வந்தடையும்.

3. நெல்லை - தாம்பரம்

நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.12, 19, 26 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06092) மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

மறுமார்க்கமாக, ஜன.13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06091) மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன.

4. ராமநாதபுரம் - தாம்பரம்

ராமநாதபுரத்தில் இருந்து 10,12,17 ஆகிய தேதிகளில் நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06104) தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 11,13,18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரெயில், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Read Entire Article