![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/22/35259320-untitled-7.webp)
சென்னை,
இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஒட்டுமொத்தமாக 45,140 பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2025 பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும் பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10/01/2025 முதல் 13/01/2025 வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 8,121 பேருந்துகளும் ஒட்டு மொத்தமாக 23,987 பேருந்துகள் இயக்கப்பட்டது.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 4,281 சிறப்பு பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 7,802 பேருந்துகளும் என ஆக மொத்தம் 21,153 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மேலும், இவ்வருடம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 168 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்பதிவு செய்து பயணம் செய்த 3,34,720 பயணிகளை விட 2025-ம் ஆண்டு பொங்கல் விழா நாளில் 27 சதவீதம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிகேற்ப அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
எனவே, பயணிகள் முன்பதிவு செய்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தங்கள் பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.