பொங்கல் திருநாள்: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் நேரில் சென்று சிறப்பு சந்தையை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு!!

3 weeks ago 5

சென்னை: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை நேரில் சென்று பார்வையிட்டு, கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் அங்கு நடைபெற்று வரும் விற்பனை மற்றும் தேவைகளை கேட்டறிந்து, தூய்மைப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களிடமும் கலந்துரையாடினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கும் மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் பெருமகிழ்ச்சியுடன் உள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பொதுமக்களுக்கு சகாய விலையில் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த சந்தை இந்த ஆட்சி தொடங்கப்பட்டு தற்போது மூன்றாவது ஆண்டாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பொங்கல் திருநாளை கொண்டாடும் மக்களுக்கும் பேர் உதவியாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 600 வாகனங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மஞ்சள், இஞ்சி, கரும்பு மற்றும் தோரண குருத்துப் போன்றவைகள் கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது, கடந்த ஆண்டு போலவே கரும்பு வண்டிகளுக்கு ரூபாய் 1,500 வாடகை என்றும், கரும்பில்லாத மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு ரூபாய் 1,000 என்றும் கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிணை போன்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமானது அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக 7 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தையினை கடந்த 09.01.2025 முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புச் சந்தைக்கான கரும்பு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 400 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வரப்பெற்றுள்ளது.

அதேபோன்று மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து ஆகியவை ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்து வரப்பெற்றுள்ளது. தோரணம் உள்ளிட்ட பொருட்கள் வாணியம்பாடி, குடியாத்தம் பகுதியில் இருந்து வந்த விவசாயிகளால் விற்கப்பட்டு வருகிறது. இந்த சந்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கும் மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் பெருமகிழ்ச்சியுடன் உள்ளனர்.

தொடர் விடுமுறை என்பதால் சற்று காலம் அதிகரித்து வியாபாரம் நடப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். வியாபாரிகள் என்ன கோரிக்கை வைத்தார்களோ உடனுக்குடன் குப்பை அகற்றும் பணி பாதுகாப்பு கருதி கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகமான போக்குவரத்து காவலர்களைக் கொண்டு போக்குவரத்து சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இச்சிறப்பு சந்தையில் துப்புரவு பணியினை முழு வீச்சில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்தையானது 17.01.2025 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்நிகழ்வின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் மா.பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன் பாபு, கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள், சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பொங்கல் திருநாள்: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் நேரில் சென்று சிறப்பு சந்தையை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு!! appeared first on Dinakaran.

Read Entire Article