ஹவுரா: மேற்குவங்கத்தில் ரூ.10 லட்சத்திற்கு கணவரின் சிறுநீரகத்தை விற்று, தனது தகாத உறவு காதலனுடன் ஓடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ரெயில் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார். ஆனால் மனைவிக்கு கொல்கத்தாவின் பராக்பூர் பகுதியை சேர்ந்த நபருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்த நிலையில் குடும்பத்தின் பொருளாதார காரணங்களை கூறியும், தனது 12 வயது மகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவும் அதிக பணம் ேதவைப்படுவதாக அந்தப் பெண் தனது கணவரிடம் அடிக்கடி கூறிவந்தார்.
மேலும் கடந்த ஓராண்டாக கணவரின் ஒரு சிறுநீரகத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பொருளாதார பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவியின் ஆலோசனையின் பேரில், கணவர் தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார். இதற்கான புரோக்கர்கள் மூலம் ஒரு சிறுநீரகத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் கணவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டது. சிறுநீரகத்தை விற்று கணவரை வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி அவரிடம், ‘விரைவில் குணமடைய வேண்டுமென்பதால் நீங்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். வெளியே எங்கும் செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, மனைவி திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த கணவர், வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம் இருக்கிறதா? என்பதை பார்த்தார். ஆனால் ரூ. 10 லட்சமும் அலமாரியில் இல்லை. பின்னர் தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் பணமும், மனைவியும் மாயமானது குறித்து கூறினார். அவர்களின் உதவியுடன் மனைவியை தேடினார். நீண்ட விசாரணைக்கு பிறகு, தனது மனைவி கொல்கத்தாவின் பராக்பூர் பகுதியில் வேறொரு நபருடன் வசித்து வருவதை அறிந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் அவர் அளித்தார். போலீசார் கள்ளக்காதலனையும், மனைவியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு வருடமாக பேஸ்புக்கில் கிடைத்த நட்பின் மூலம் அந்தப் பெண்ணுக்கும், கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலனுடன் ஓடிப் போக வேண்டி தனது கணவரின் சிறுநீரகத்தை விற்க வலியுறுத்தி உள்ளார். அதன்படி ஒரு சிறுநீரகமும் விற்கப்பட்டது. அதன்மூலம் கிடைத்த ரூ. 10 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனது மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு கள்ளக்காதலனின் வீட்டிற்கு அந்தப் பெண் ஓடிவிட்டார்.
தற்போது கள்ளக்காதலனிடம் இருந்து வரமறுத்துவிட்டார். அதேநேரம் தனது கணவரை விவாகரத்து செய்வதாகவும், தனது மாமியார் தன்னை கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும் ரூ. 10 லட்சத்தை வீட்டில் இருந்து எடுத்து செல்லவில்லை என்றும் கூறுகிறார். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.
The post பேஸ்புக்கில் கிடைத்த நட்பால் வந்தவினை; ரூ.10 லட்சத்திற்கு கணவரின் சிறுநீரகத்தை விற்று தகாத உறவு; காதலனுடன் ஓடிய மனைவி appeared first on Dinakaran.