சென்னை: பொங்கல் பெருவிழாவை மக்கள் சிரமமின்றி கொண்டாட பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதிலும் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டுவருகின்றன. அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளன.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ, எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சி பொங்கட்டும், அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
The post பொங்கலை கொண்டாட 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.