சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 6.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையைப் பொருத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 1.87 லட்சம் பேர் பயணத்திருந்தனர்.