பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. புறநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இதனால் பெங்களூருவில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
மேலும் பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் தேங்கியதில் சாக்கடை செல்லும் வழிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. இதனால், அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்கிறார். அவர் பெங்களூரு நகரை ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார். அவருடன் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
The post பெங்களூருவில் இரு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை: பதித்த பகுதியில் மக்களை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் சித்தராமையா appeared first on Dinakaran.