சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை எல்லீஸ், அமெரிக்க வீராங்கனை ஆன் லீ மோதுகின்றனர். சிங்கப்பூர் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. அதில் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் அன்னா களின்ஸ்கயா (26 வயது, 18வது ரேங்க்), அமெரிக்காவின் ஆன் லீ (24வயது, 85வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை ஆன் 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஆன் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்த போது அன்னா காயம் காரணமாக வெளியேறினார். அதனால் 59 நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஆட்டத்தின் மூலம் ஆன் லீ இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதியில் சீன வீராங்கனை வாங் ஜிங்யூ (23வயது, 35வது ரேங்க்), பெல்ஜியம் வீராங்கனை எலீஸ் மார்டன்ஸ் (29வயது, 22வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். ஒரு மணி 30 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் எலீஸ் 6-3, 6-4 என நேர் செட்களில் வாங்கை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆன்-எல்லீஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
* சென்னை ஓபன் டென்னிஸ் நாளை துவங்குகிறது
ஏடிபி டூர் சேலஞ்சர் சென்னை ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது. முன்னதாக இன்று தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
The post பைனலில் ஆன் லீ – எல்லீஸ் சிங்கப்பூரில் வெல்லும் சிங்கப் பெண் யார்? appeared first on Dinakaran.