தில்லைச் சிதம்பரத்தில் பொற்சபையில் நின்றவாறே இறைவனை தரிசித்த நம்பி ஆரூரார், கொங்கு நாட்டில் கோவைக்கு அருகில் அருள்பாலிக்கும் பேரூர் பட்டீஸ்வரப் பெருமானையும் மானசீகமாகப் போற்றிப் பாடினார் இப்படி-‘பேரூர் பெருமானை புலியூர்ச் சிற்றம் பலத்தே பெற்றோ மன்றோ?’’ என்கிறார்.
‘‘ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி
காஞ்சி வாய்ப் பேரூர்!’’ என்றும் ‘‘பேரூர் உறை’
வாய்ப் பட்டிப் பெருமான் பிறவா நெறியாமே!’’
– என்று சுந்தரமூர்த்தி நாயனார்பாடுகிறார்.
‘‘ஆரூர் மூலட்டானம் ஆணைக்காவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடம் ஆவூர், பேரூர், பிரம்மபுரம், பேராஆரும்’’ என்று பழம் பெருமை வாய்ந்த பேரூர்த் தலத்தைச் சிறப்பித்துப் பாடுகிறார் அப்பர் பெருமான்.கொங்கு நாட்டில் கோவைக் கருகில் உள்ள காஞ்சி வாய்த்தலைப் பேரூர் எனப் புகழ் பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அப்பர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தேவார மூவரால் பாடல் பெறாத திருத்தலமாக இருந்த போதிலும், தேவார வைப்புத் தலமாகவே இப்பேரூர் போற்றப்படுகிறது. அப்பர் காலம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக் காலம். காஞ்சி வாய்த்தலைப் பேரூர் என்றும், மேலைச் சிதம்பரம் என்றும் போற்றப்படும் இவ்வூருக்குப் பிறவாநெறி’ என்ற பெயரும் இருந்திருக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள பழமையான திருக்கோயில் இது. இதைக் கரிகால் சோழன் கட்டியதாக வரலாற்றுச் செய்திகள்கூறுகின்றன.அதற்குச் சாட்சி போல் பிறவாப்புளியும், இறவாப்பனையும் கோயில் வாசலிலேயே இருக்கின்றன.சுந்தர மூர்த்தி நாயனார் தன்னுடைய கொங்கு நாட்டுப் பயணத்தின் போது பேரூர்க்கு வந்து இறைவனை வணங்கியிருக்கிறார். ‘‘பேரூர் உறையும் பட்டிப் பெருமான்’’ என்று பாடியுள்ளார். தேவாரப் பதிகம் பெறாத இத்தலம் ஒரு வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. காஞ்சி வாய்ப்பேரூர் என்றும் குடகத் தில்லையம் பலம் (மேலைச் சிதம்பரம்) என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் என்ற சமயக்குரவர் நால்வருள் சுந்தர மூர்த்தி நாயனாருக்கென்று ஒரு தனியிடமும், சிறப்பும் உண்டு. இறைவனே திருக் கயிலாயத்தில் ஒரு சமயம் தன் பேரழகைத் தானே கண்டு மயங்கி, ‘‘சுந்தர வருக!’’ என்று கூறவே, இறைவனின் அம்சமாக சுந்தரர் தோன்றினார் என்றும், பார்வதி தேவிக்கு சேவை புரிந்து கொண்டிருந்த தோழியர் அநிந்திகை, கமலினி ஆகிய இருவர் பால் அவர் மையல் கொள்ளவே, இறைவன் அவர்கள் மூவரையும் பூவுலகில் பிறந்து இல்லற இன்பம் துய்த்துவிட்டு, மீண்டும் கயிலாயம் வந்து தன்னை அடையுமாறு கட்டளையிட்டதோடு, தானே வந்து சுந்தரரை ஆட்கொள்ள இருப்பதாகவும் கூறியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
சுந்தரர் திருநாவலூர் என்ற திருத்தலத்தில் அவதரித்து, சடங்கவி சிவாச்சாரியரின் அன்பு மகளைத் திருமணம் முடிக்க விருந்த தருணத்தில் இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு, இறைவனோடு வாதாடிவன் தொண்டன் என்று இறைவனாலேயே அழைக்கப்பட்டு, பரவையார், சங்கிலியராகப் பிறந்திருந்த அநிந்திதை, கமலினியை மணம் முடித்த பின்னர், பல தலங்களையும் தரிசித்து, இறுதியில் இறைவனாலேயே அனுப்பி வைக்கப்பட்ட வெள்ளை யானையின் மீதேறி கயிலையை அடைந்தார் என்பது வரலாறு.
சுந்தரர் கொங்கு நாட்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்ட போது, சுந்தரர் வாழ்வில் கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற ஏழு தலங்களில் உள்ள அவினாசி, பேரூர் மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய மூன்று தலங்களும்முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவினாசியில் தான் முதலையால் விழுங்கப்பட்ட ஒரு பாலகனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்து அவனது பெற்றோர்களைச் சுந்தரர் மகிழச் செய்தார்.பேரூரைப் பொறுத்த மட்டில் சுந்தரர் இத்தலத்திற்கு எழுந்தருளிய போது ஒரு முக்கியமான நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் நடைபெற்றது. இதையொட்டியே இக்கோயிலில் நடைபெறும் ஆனி மாதத் திருவிழாவின் போது வேறு எந்தவொரு தலத்திலும் காண முடியாத ஒரு சடங்கு நடைபெறுகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து வரும் காலையில் பேரூரையடைந்து காஞ்சி மா நதியென்று போற்றப்படும் நொய்யில் நதியில் நீராடி, பேரூர் பெருமானைத் தரிசிக்க ஆலயத்திற்குச் சென்றார். சுந்தரமூர்த்தியாருடன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய இறைவன் வயல் வெளியில் வேலை செய்யும் பண்ணையாளாக வேடமிட்டு வயல் வெளிக்குச் சென்று விட்டார். தேவியும் இதர சில கணங்களும் கூட வயலில் பணிபுரியும் வேலையாட்களாக மாறி இறைவனோடு சென்று விட்டனர்.
ஆலயத்தில் இறைவனைக் காணாது ஏமாற்றமடைந்த சுந்தரர் இதுபற்றி நந்திதேவரிடம் விசாரிக்க, ஆண்டவனின் கட்டளைக் கேற்ப நந்திதேவரோ ஏதும் கூறாமல் நின்றார்.ஆனால், சுந்தரர் மீது இரக்கம் கொண்ட நந்திதேவர் தன் கண் அசைவினால் இறைவன் இருக்கும் இடத்தைத் தெரிவித்தார். பின்னர் சுந்தரர் வயல் வெளிக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்த இறைவனையும் இறைவியையும் கண்டு விழுந்துவணங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில், நாடெங்கிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் நடைபெறாத ‘நாற்று நடவு உற்சவம்’ பேரூர் பட்டீஸ்வரர் தலத்தில் மட்டுமே நடைபெறுவதை பேரூர் புராணம் இப்படி விவரிக்கிறது.‘‘சுந்தர மூர்த்தி நாயனார் வருமுன்னரே உயர்திணைப் பொருளும், அஃறிணைப் பொருளுந் தாமேயென்று வேதங்கள் எடுத்துக் கூறுவதற்கேற்ப, முன்பு வேதியராய்த் தம்மைக் காட்டிப் பயனைக் கொடுத்த சிவபெருமான் தன்னை சாதாரணராக மாற்றிக் கொண்டார். திருவிளையாட்டினால் சேறும் சகதியும் நிறைந்த வயலில் இறங்கினார். உமாதேவியாரும் பணிப் பெண்ணாக மாறி தொழில் செய்யத்தொடங்கினார். விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் பள்ளிச்சிறார்களால் வயலின் கண் விளையாடினார். அரிபிரமேந்திராதி தேவர்கள் நுகமும், கலப்பையும், மேழியும், கொழுவும், வாரும், கயிறும், கோலும், கடாவும், வித்தும் நாறும் ஆகிய எல்லாமாகி வந்தார்கள்.
இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி முதலாயினோர் உமாதேவியோடு நாற்று நட்டார்கள். இங்ஙனம் இவர்கள் வயலில் தொழில் செய்து கொண்டிருந்தபோது ஆலயத்திற்குச் சென்ற சுந்தர மூர்த்தி நாயனார் சிவபிரானை அங்கே தரிசிக்கப் பெறாமல் இடப தேவரிடம் ‘இறைவன் எங்கே? என வினவினார். அதற்கு இடபதேவர் வன்றொண்டனான சுந்தரமூர்த்தி வருவான். அவனுக்கு ஒன்றும் சொல்ல வேண்டாமென்று சிவபிரான் ஆணையிட்டிருந்த படியால் வாய் திறந்து எதுவும் சொல்லாமல் இருந்தார் இடபதேவர்.
இறைவனை தரிசிக்க வெகு ஆவலாக வந்த சுந்தரமூர்த்தியின் மேல் இரக்கம் கொண்ட இடப தேவர் கண்ணினால் குறிப்புக்காட்ட, அக்குறிப்பின் வழியே சுந்தரர் வயல்வெளிக்கு வந்து ஆராய்ந்து சுவாமியையும் அம்மையையும் கண்டு வணங்கினார்.சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபெருமான் கரையேறிக் காஞ்சி மாநதியில்ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைந்தார்.
தன் கட்டளையை மீறிய இடப தேவர் முகத்தை மண்டொடு கருவியாற் சேதிக்க, அதற்கு இடபதேவர் அஞ்சி வணங்கிக் கொம்பினாலே ஒரு தீர்த்தம் அகழ்ந்து சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசித்து குற்றத்தினின்று நீங்கினார். பின்னர் சிவபெருமான் வெள்ளியம் பலத்திலே திருநடனஞ் செய்தார். அதனைத் தரிசித்துப் பெரும் பேறு பெற்றார் சுந்தரர். அதோடு அழகிய சிற்பங்கள் நிறைந்த மகத்தான கலைக்கூடத்தின் நடுவே, கனகசபை எனும் பொன்னொளி மண்டபத்தில் பொன்னாலேயே ஆன பெருமான் புலித்தோல் உடுத்தி தூக்கிய திருவடியும், பக்கத்திலே சிவகாமி தாயுமாகக் காட்சி தந்த அற்புதங்காலங்கண்டு பேரின்பம் எய்தினார் சுந்தரர்’’ என்று விவரிக்கிறது பேரூர் புராணம்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை அடுத்து வணங்கிச் சென்று தில்லைச் சிதம்பரம் அடைந்தார். அங்கு திருச்சிற்றம் பலத்திலே திருநடனமிடும் இறைவனை வணங்கி ‘‘பேரூர் பெருமானைப் பெற்றோம்’’ என்று அருளிச் செய்த தேவாரத்தைத் தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டு மெய் சிலிர்த்தனர் ‘தில்லைத் தலம் போல் இவ்வுலகத்திலே வேறு ஒரு தலம் உண்டோ?’ என்று தில்லை வாழ் அந்தணர்கள் வினவியதற்கு ‘‘இத்தில்லைக் கனகசபையிலே தாண்டவஞ் செய்யும் நடராஜப் பெருமானைப் போன்ற மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படும் திருப்பேரூர் வெள்ளியும் பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார்.
அத்தலத்தில் முக்தி தருவதன்றி வேறு தருமார்த்த காரியங்கள் எதுவும் தருதலில்லை’’ என்றார் சுந்தரர். உடனே தில்லை வாழ் அந்தணர்கள் புறப்பட்டு திருப்பேரூரைச் சேர்ந்து காஞ்சி மாநதியில் குளித்து திருமேனியில் சிவ சின்னங்களைத் தரித்து சுவாமியையும்அம்பிகையையும் தரிசித்து, ஆன்மாவும் சிவமும் அத்து விதமாய் மனம் அழிந்து அவசமாய் நின்று துதித்து விடை பெற்று மீண்டும் தில்லைச் சிதம்பரம் சென்றடைந்தனர்.திருப்பேரூர் நடராஜப் பெருமானின் புகழ் எங்கும் பரவியது.
சுந்தரருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடுகின்ற மக்கள் கோலத்தில் காட்சியளித்த திருவிளையாடல்களைக் குறிக்கும் வகையில் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ‘‘நாற்று நடவு உற்சவம்’’ மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று ‘நாற்று நடவு உற்சவம்’ ‘இத்திருக்கோயிலில் துவங்குகிறது, இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் ஆனி உத்திர நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் விழா, உத்திர நட்சத்திரத்தன்று ஆனித் திருமஞ்சனத்தோடு நிறைவு பெறுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு (விசுவாவசு) வருகிற ஆனி 9-ம் நாள் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஆனி 18-ம் நாள் உத்திர நட்சத்திரம் முடிய 10 நாட்கள், ஆனி திருமஞ்சனத்தோடு முடிவடைகிறது. (ஆங்கிலத்தேடு 23.06.2025 முதல் 2.07.2025 முடிய)இறைவனும் இறைவியும் பள்ளர் வேடமிட்டு நாற்று நடும் காட்சி இன்றும் நடைமுறையில் உள்ளது. நாற்று நடவுக்கான நிலம் திருக்கோயிலின் தென் பகுதியில் இதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தம்பிரான் தோழரான சிவபெருமான், சுந்தரர் பொருட்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் பேரூர் தலத்தில் இறைவன் பண்ணையாளாக வேடம் ஏற்றுக் காட்சி தந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கின்ற வகையில் நாற்று நடவு உற்சவம் நடத்திக் காட்டப்படுகிறது. இந்த அற்புதக் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேரூர் வந்து குவிகிறார்கள்.
ஆனி உத்திர தரிசனமும், நடராஜரின் அபிஷேகமும் நடைபெறுகின்ற நாள் அதுவாகும். அன்று தரிசனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.அமைவிடம்: கொங்கு நாட்டில் கோவை மாநகருக்கு அருகே கோவையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் நகருக்கு மேற்கே நொய்யல் என்கிற காஞ்சிமா நதிக்கரையில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
டி.எம்.ரத்தினவேல்
The post பேரூரில் நாற்று நடவு உற்சவம் appeared first on Dinakaran.