நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில் பகுதியில் அலங்கார வளைவுகள்: கண்காணிப்பு கேமராக்களுடன் அமைகிறது

5 hours ago 3


நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 2 நுழைவு வாயில் பகுதியிலும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்க திட்டம் கடந்த 2023ம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. முனைய விரிவாக்க திட்டத்தில் வாகன பார்க்கிங், பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் வசதிகள், தங்கும் அறைகள், பஸ் நிறுத்தம், அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த அலங்கார வளைவுகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய 2 நுழைவு வாயில் பகுதியிலும் அமைக்கப்பட உள்ளது. அலங்கார நுழைவு வாயிலுக்கான பணிகள் தற்போது நடக்கின்றன.

கோட்டார் கம்பளம் சந்திப்பில் ஒரு நுழைவு வாயில் அமைகிறது. மற்றொரு நுழைவு வாயில் கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் சாலையின் தொடக்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்த இரு நுழைவு வாயில்களில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட உள்ளன. முனைய விரிவாக்க பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இது தவிர ரயில்கள் பராமரிக்க தேவையான பிட்லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

இதே போல் கூடுதலாக 4 மற்றும் 5 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரயில் நிலைய முனைய பணிகள் மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர வேண்டிய புதிய ரயில்கள் தள்ளி கொண்டே போகிறது. இந்த பணிகள் ஓரளவு முடிந்தால் தான் புதிய ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என பயணிகள் கூறுகிறார்கள்.

The post நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 நுழைவு வாயில் பகுதியில் அலங்கார வளைவுகள்: கண்காணிப்பு கேமராக்களுடன் அமைகிறது appeared first on Dinakaran.

Read Entire Article