பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை

3 weeks ago 7

 

ஏழாயிரம்பண்ணை, அக்.25: வெம்பக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஏழாயிரம்பண்ணை. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டையில் இருந்து இப்பகுதி வழியாக கோவில்பட்டி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமான மக்கள் தினசரி சென்று வருகின்றனர்.

இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மக்கள் தொகை மற்றும் வாகன வசதிக்கு ஏற்ப சாத்தூர் கோவில்பட்டி சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வந்தனர்.தற்போது அப்பகுதியில் அதிக அளவு பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் தினசரி வெளியூர்களுக்கு சென்று வருவதால் பேருந்து வசதிகள் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை மிகவும் பழமை வாய்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு வரும் பயணிகள் மற்றும் மாணவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு இடமில்லாமல் மிகவும் பரிதவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தில் கழிப்பறையை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article