கூடலூர் அருகே தேவர்சோலை முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் சிறுத்தை நடமாட்டம்

2 hours ago 1

கூடலூர்: கூடலூர் அடுத்த தேவர்சோலை பேரூராட்சி செலுக்காடி பகுதியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செலுக்காடி பகுதியில் வசிப்பவர் கோயா. இவரது மனைவி சபியா. தேவர்சோலை முன்னாள் பேரூராட்சி தலைவர். இவரது வீடு அருகே கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தொடர்ச்சியாக நடமாடி வருகிறது. இரவு நேரத்தில் குடியிருப்புகளை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் வீடுகள் தேயிலை தோட்டங்களில் தனித்தனியாக உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. இரவு நேரத்தில் வீடுகளை சுற்றி வரும் சிறுத்தை வீடுகளில் உள்ள வளர்ப்பு விலங்குகளை தேடி வரலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் சிறுத்தையால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தைக்கு உடலில் பிரச்னைகள் இருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே தேவர்சோலை முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article