பேரிடர்களில் முதலில் துணை நிற்கும் இந்தியா

1 day ago 2

கருணை அடிப்படையில் உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியா எப்போதுமே முன்னணியில் இருந்துவருகிறது. எந்த நாட்டில் பேரிடர் ஏற்பட்டாலும் அந்த நாடு உதவி கேட்கும் முன்பே இந்தியாவின் உதவி அங்கு சென்றுவிடும். அந்தவகையில், 2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் சுனாமி பேரழிவின்போது இந்தியா உடனே 46 தேசிய பேரிடர் மீட்பு படையினரை அங்கு அனுப்பி, அவர்களும் அந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந்தேதி வரை இருந்து பல உடல்களை மீட்டதோடு மட்டுமல்லாமல், 5 கோடி யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 85 லட்சம்) ரொக்க பணத்தையும் மீட்டுக்கொடுத்தனர்.

2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது 700 மீட்பு படையினரையும், 18 மோப்ப நாய்களையும் அனுப்பியது. அவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றியதால் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 133 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும் 152 மீட்பு படையினரோடு, 4 மோப்ப நாய்களும் மீட்பு பணிக்காக சென்றன. அந்த அணியினர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை களத்தில் இறங்கியதோடு, 2 பெண்களை 48 மணி நேரம் கழித்து உயிரோடு மீட்டனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே கிடந்த 85 உடல்களை கண்டுபிடித்தனர். இப்போது மணிப்பூரில் நமது எல்லையை ஒட்டி இருக்கும் முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் மிக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு கொத்து, கொத்தாய் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சிக்கு எதிராக அரக்கான் என்ற கிளர்ச்சிப்படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இப்போதுள்ள நிலவரப்படி 50 சதவீத பகுதிகளை ராணுவமும், 50 சதவீத பகுதிகளை கிளர்ச்சிப்படைகளும் தன் வசம் வைத்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அப்போதைய பர்மாவில் குடியேறினர். அவர்களில் 60 சதவீதம் பேர் தமிழர்கள். அத்தகைய மியான்மரில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை காலையில் மிக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகபட்சமாக 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 6 மாகாணங்கள், அதிலும் பெரும்பாலான இடங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்தான் மோசமான பாதிப்புகளை சந்தித்தன. ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரையோடு தரையாகின.

இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். 3,400 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இன்னும் மீட்பு பணி தொடர்கிறது. இந்த தகவல் கிடைத்த உடனேயே பேரிடர்களின்போது முதலில் உதவி அளிக்கும் நாடு என்ற அடைமொழியை பெற்று, ஆபத்பாந்தவனாக திகழும் இந்தியா தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பியது. முதலில் மருத்துவ குழுவினரை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றது. தொடர்ந்து மற்ற மீட்பு படையினர் சென்றனர். அவர்கள் தற்காலிக மருத்துவமனையை அமைத்து சிகிச்சையை தொடங்கியுள்ளனர். கிழக்கு கடற்படையை சேர்ந்த கப்பல்களான சத்புத்ரா, சாவித்திரி ஆகியவை நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு மியான்மரில் உள்ள யாங்கூனுக்கு சென்றன. மேலும் 2 கப்பல்களும் புறப்பட்டுவிட்டன. இந்த கப்பல்களில் உணவு பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், ஆடைகள், குடிநீர் உள்ளிட்ட 52 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு மிக பொருத்தமாக ஆபரேஷன் பிரம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மற்ற நாடுகளும் நிவாரண உதவிகளை செய்யத்தொடங்கிவிட்டன. மனிதநேயத்துக்கு இந்தியா வழிகாட்டுகிறது. 

Read Entire Article