
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 28.12.2024 அன்று நடந்தது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதற்கு ராமதாசின் மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு டாக்டர் ராமதாஸ், நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்று கூறினார். பொதுக்குழு கூட்ட மேடையிலேயே இருவருக்கும் இடையே மோதல் முற்றியதால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, பனையூரில் அலுவலகம் திறந்திருப்பதாகவும், அங்கு வந்து நிர்வாகிகள் என்னை சந்திக்கலாம் என்றும் கூறிவிட்டு மைக்கை மேஜையில் வீசிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 10.4.2025 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணியை டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். பா.ம.க. நிறுவனரான நானே, இனி பா.ம.க. தலைவராகவும் செயல்படுவேன் என்றும், செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கட்சி நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் குடும்பத்தினர் மற்றும் பா.ம.க. மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து சமாதானப்படுத்தினர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மற்றும் வன்னியா் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு கடந்த 11-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்றனர். மாநாட்டில் டாக்டர் ராமதாசின் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் 16-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இதில் டாக்டர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் அருள் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சியில் 91 மாவட்ட செயலாளர்கள், 91 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். ஆனால் கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் என மொத்தம் 162 பேர் டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர். பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாசும் பங்கேற்கவில்லை. இது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். ராமதாஸ் - அன்புமணி இருவரும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை. பாமகவில் விரைவில் சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.