சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 2023ம் ஆண்டு சட்டப் பேரவையில் ஆளுநர் உரயைாற்றும் போது அந்த உரையில் இடம் பெற்ற புகழ்பெற்ற தலைவர்களான பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்றோரின் பெயர்களையும், தமிழ் மொழியின் சிறப்புகள் ஆகியவற்றை வாசிக்க மறுத்துவிட்டார். இறுதியில் இடம் பெற்ற வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் என்ற வாசகங்களையும் படிக்காமல் சென்றுவிட்டார். அது குறித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இந்த ஆண்டு மட்டும் ஏன் ஆளுநர் அவமதித்து விட்டதாக கூறி போராட்டத்தை நடத்துகிறீர்கள். எதை திசைதிருப்ப இந்த போராட்டத்தை நடத்தினீர்கள்? அதிமுகவினர் போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்கிறீர்கள், அதேநேரத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினால் அனுமதிக்கிறீர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்: கடந்த ஆண்டு ஆளுநர் சட்டப் பேரவைக்கு வந்து ஆளுநர் உரையைப் படித்தார். அதில் சிலவற்றை விட்டுவிட்டார். ஆனால் இந்த ஆண்டு சட்டப் பேரவைக்கு வந்தும் உரையை முழுமையாக படிக்காமல் சென்றுவிட்டார். அதனால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், போராட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். அனுமதிக்காத இடத்தில் போராட்டம் நடத்தினால் கைது செய்வார்கள். இது தான் சட்டம். எடப்பாடி: நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படுமா? அமைச்சர் சக்கரபாணி: நெல்குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று சொன்னோம். இப்போது ரூ.2400 வரை வழங்கப்படுகிறது.
எடப்பாடி: கொரோனா பாதிப்புக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் வரிச்சுமை அதிகரித்துவிட்டது. வரியை குறைக்க வேண்டும். அமைச்சர் நேரு: ஒன்றிய அரசு கூறியதின் பேரில் மாநில அரசின் பங்கை பெறுவதற்காக வரி உயர்த்தப்பட்டது. குறிப்பாக 1500 சதுர அடி முதல் 2400 சதுர அடிக்குமேல் இருப்பதற்கு தான் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு கீழ உள்ளவர்களுக்கு வரி உயர்வு இல்லை. எடப்பாடி: பத்திரப்பதிவு கட்டணத்தை பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். மின் கட்டணம் ஓராண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் இருமுறை மின் கணக்கீடு என்ன ஆனது. அமைச்சர் செந்தில் பாலாஜி: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு. வீட்டு உபயோகத்துக்கு 0 சதவீதம் என்று வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி: மழை காலத்தில் சென்னையில் சாலை பாதிப்பு ஏற்பட்டது, மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதா. அமைச்சர் நேரு: கொற்றலை ஆறு பணி முடிக்கமட்டும் 8 மாதம் காலம் உள்ளது. மற்ற பணிகள் முடிக்கப்பட்டன. பொதுவாக பருவகாலத்தில் 15 செமீ அல்லது 16 செமீ வரை மழை பெய்யும் போது மழை நீர் வடிந்து செல்லும் வகையில் சென்னையில் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 40 செமீ மழை பெய்தால் மழை நீர் வடிய கொஞ்சம் நேரம் ஆகும்.
எடப்பாடி: பெஞ்சல் புயல் நேரத்தில் முன்கூட்டிய வானிலை மையம் அறிவித்ததை ஏற்று அரசு உடனடியாக தயார் நிலையில் இருந்திருந்தால் விழுப்புரம்,மாவட்டத்தில் பாதிப்பை தடுத்திருக்கலாம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்: முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் தால் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் எல்லாம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நீங்கள் கொரோனா காலத்தில் கூட வெளியில் வரவில்லை. எடப்பாடி: போக்குவரத்து துறையில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்ன ஆனது. போக்கு வரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராடுகின்றனர். அவர்களை அழைத்துப் பேச வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் நாள் அதிகரிக்கப்படுமா? பெட்ரோல் டீசல் விலையை பொறுத்த வரையில் டீசல் விலை குறைக்கப்படுமா? பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா? அமைச்சர் சிவசங்கர்: கடந்த ஆட்சியில் இயக்கப்பட்ட பேருந்துகள் பழையதாகிவிட்ட நிலையில் அவற்றை அகற்றிவிட்டு புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன. மின்சார பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
The post பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் ஆளுநர் உரையை படிக்காததால் திமுக போராட்டம் நடத்தியது appeared first on Dinakaran.