பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?.. இன்று மீண்டும் மோதல்

3 hours ago 2

சென்னை,

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும். அதேவேளையில் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது. ஆக்ரோஷமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணி ஒரே ஒரு முறை மட்டுமே 180 ரன்களை கடந்து இருக்கிறது. ஷிவம் துபே (242 ரன்), ரச்சின் ரவீந்திரா ஓரளவு நன்றாக செயல்படுகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. கடந்த 2 ஆட்டங்களில் களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, முந்தைய ஆட்டத்தில் அறிமுகமான டிவால்ட் பிரேவிஸ் துரிதமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்களாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா (323 ரன்), பிரப்சிம்ரன் சிங் (292), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் மிரட்டுகிறார்கள்.

நடப்பு சீசனில் இரு அணிகளும் முல்லன்பூரில் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் சென்னையும், 15 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

சென்னை: ஷேக் ரதீஷ், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா அல்லது வன்ஷ் பேடி, தோனி (கேப்டன்), அன்ஷூல் கம்போஜ் அல்லது ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.

பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், மார்கோ யான்சென், ஜோஷ் இங்லிஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார்.

Read Entire Article