சிவமொக்கா: கர்நாடகாவில் பேய் விரட்டுவதாக கூறி பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த கீதம்மா (55) என்ற பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதாக அவரது சொந்த மகன் சஞ்சய் நம்பியுள்ளார். இதையடுத்து, தான் பேய் ஓட்டுவதாகக் கூறிக்கொண்டிருந்த ஆஷா என்ற பெண் மற்றும் அவரது கணவர் சந்தோஷ் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் தொடங்கிய இந்த ‘பேய் ஓட்டும் சடங்கு’ என்ற பெயரிலான சித்திரவதை, இன்று அதிகாலை 1 மணி வரை நீடித்துள்ளது.
எலுமிச்சையால் தலையில் அடிப்பது, முடியைப் பிடித்து இழுத்து அறைவது, குச்சியால் சரமாரியாகத் தாக்குவது எனத் தொடர்ந்த கொடூரமான தாக்குதலால் கீதம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கீதம்மாவின் மகன் சஞ்சய், மாந்திரீகம் செய்த ஆஷா மற்றும் அவரது கணவர் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நவீன அறிவியல் வளர்ந்துள்ள போதிலும், சில பகுதிகளில் வேரூன்றியிருக்கும் மூடநம்பிக்கைகள் இதுபோன்ற கொடூரமான குற்றங்களும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வாரம் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தை சேர்ந்த சீதா தேவி என்ற பெண், சிலருக்கு சூனியம் வைப்பதாகக் குற்றம்சாட்டி, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கியது. இந்த தாக்குதலில் சீதா தேவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கி, உயிருடன் தீ வைத்துக் கொளுத்தியது. மேலும், அவர்களது உடல்களை அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக ஆகாயத் தாமரைச் செடிகளுக்கு அடியில் வீசிவிட்டுச் சென்றது. இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய சீதா தேவியின் 16 வயது மகன் அளித்த தகவலின் பேரில், இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
The post பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்தே கொன்ற மாந்திரீக தம்பதி: கர்நாடகாவில் பயங்கரம் appeared first on Dinakaran.