
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மும்பை அணியில் தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ஹார்திக் பாண்ட்யா திரும்பினார். இதில் டாஸ் ஜெயித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனையடுத்து 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இரண்டு இடங்களிலும் 15-20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் களத்தில் தொழில்முறை வீரர்களாக இல்லை. அடிப்படை தவறுகளை செய்தோம். டி20 போட்டியில் 20-25 ரன்கள் குறைவு என்பது மிக அதிகம்.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். அதிரடியான ஷாட்டுகளை அடிக்காமல் ரிஸ்க் எடுக்காமலேயே அவர்கள் ரன்கள் குவித்தனர். அப்போதிலிருந்தே நாங்கள் அவர்களைப் பிடிக்க வேண்டியதாக இருந்தது. அது போன்ற நேரங்களில் நாங்கள் அனைவரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். தொடர் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
வெற்றிகளைப் பெற எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தொடங்க வேண்டும். அவர்கள் அதை விரைவாக செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த பிட்ச்சில் ஸ்லோவான பந்துகள் மிகவும் கடினமான பந்துகளாகும். அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது. நான் பவுலிங் செய்தது போலவே குஜராத் பவுலர்கள் பந்து வீசி அசத்தினர்" என்று கூறினார்.