பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியின் முக்கியச்சாலையான அண்ணாசாலை. இந்த சாலையின் கிழக்குப்பகுதியில் காவேரி குடிநீர் செல்வதற்கான குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு அதற்காக குழாய் பதிக்கும் பணி பல மாதங்களாக நடந்தது. இதனால் இந்த சாலை முழுவதும் சேதமாயின. இதனால் போக்குவரத்து வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.சிறிது மழைபெய்தால் கூட சேறும் சகதியுமானது. இதனை தொடர்ந்து பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர்களுடன் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு சீக்கிரம் சரி செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு முன்பு இந்த சாலையின் கிழக்குப்பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இதனால் சகதி இல்லாமல் இருந்தது.
இந்த சாலை வழியாக சென்னை,கோவை,மதுரை, திருப்பூர்,திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, துவரங்குறிச்சி, பாலக்குறிச்சி, சடையம்பட்டி, இலுப்பூர், திருமயம்,திருப்பத்தூர்,ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச்செல்லும் அரசு மற்றும் தனியார் பேரூந்துகள், லாரிகள்,கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்படால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்கள் ஓட்டிச்செல்கின்றனர்.சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் சந்தைக்கு கூடுதல் வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன.
இப்போது ஜல்லிகள் சிதறிக்கிடக்கும் இந்த சாலை செல்லும் வாகனங்களில் சக்கரங்களில் இருந்து ஜல்லிகள் சிதறி பொதுமக்கள் மீது பட்டு பலர் காயமடைகின்றனர். மேலும் இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இனியும் காலம் தாழ்த்தாமல் பொன்னமராவதி அண்ணாசாலையை தரமான தார்சாலையாக போடவேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னமராவதி நகரில் குண்டும், குழியாக மாறிய அண்ணா சாலையை சீரமைக்க வேண்டும்: வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.