ஈகைத் திருநாள் எந்த அடிப்படையில் கொண்டாடப்படுகிறது? இந்தத் திருநாளின் மகிழ்ச்சி எதைக் குறிக்கிறது?ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு மன்னன் வெற்றிக்கொடியை நாட்டிவிட்ட மகிழ்ச்சியை இந்நாள் குறிக்கிறதா?செழிப்பைக் குறிக்கும் பருவ மாற்றத்திற்காக இந்தப் பாங்கான பெருநாளைக் கொண்டாடுகிறோமா? அல்லது எவரேனும் ஒரு பெரியாரின் பிறந்த நாளைப் பசுமையாக நினைவில் பதிக்கும் பெருவிழாவா?இல்லை…! இல்லை…!இவற்றில் எந்தவொன்றும் பெருநாள் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இல்லை. அதன் அடிப்படை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது.அது என்ன?மனித இனம் இறைவனின் வழிகாட்டுதலுக்காக ஏங்கி நின்றது. அகிலத்தைப் படைத்த இறைவன் தன்னுடைய கருணையினால் அந்த ஒளிமிக்க வழிகாட்டுதலை வழங்கினான்.ஆம்..! வான்மறை குர்ஆன் அருளப்பட்டதாலேயே இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கிறோம். அதிகமதிகம் இறை தியானத்தில் மூழ்கியிருக்கிறோம்.தன் வழிகாட்டுதலை வழங்கிய இறைவன் அதைப் பின்பற்றும் நற்பேற்றையும் வழங்கினான். ரமலானின் பயிற்சியால் அந்த வழி காட்டுதலைப் பேணிக் காக்கும் ஆற்றலை இன்னும் அதிகமாக அருளினான்.எனவே, இந்த ஈகைப் பெருநாள் அந்த ஏக இறைவனின் பெருமையைப் பாடும் பெருநாளாகவும் நம்முடைய நன்றியைத் தெரியப்படுத்தும் திருநாளாகவும் திகழ்கிறது.
பெருநாளன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் என்று அண்ணல் நபியவர்கள் கூறியுள்ளார்கள். “இன்று உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாளாகும். ஒன்று சேர்ந்து மகிழ்ச்சி கொண்டாடுவதன் மூலம் இன்பத்தைப் பெறுகின்ற நாள்; மேலும் இறைவனை நினைவுகூரும் நாள்.”பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் வழங்கி விடுங்கள். தேவையுடையோரும் வசதியற்றோரும் பெருநாள் மகிழ்ச்சியில் பங்குகொள்ள அது பெரிதும் உதவும்.அண்ணல் நபியவர்கள் கட்டளையிட்டார்கள். “பெருநாள் தர்மம் என் சமுதாயத்தினர் மீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நோன்பின்போது ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும், ஏழை எளியோரின் பசியைப் போக்கவும் இது துணை செய்யும்.” (ஆதாரம்: அபூதாவூத்)பெருநாள் தொழுகையை ஈத்கா என்று அழைக்கப்படுகின்ற திறந்த வெளித் திடலில் நிறைவேற்றுவது மிகுந்த சிறப்புக்குரியதாகும். தொழுகைக்குப் பிறகு ‘துஆ’ எனும் இறைவேட்டல் மிக உருக்கமாக நடைபெறும்.நமக்காக, நமது குடும்பத்திற்காக, நமது ஊருக்காக, நம் நாட்டின் நலனுக்காக, உலக அமைதிக்காக, மறுமை வெற்றிக்காக என்று மிக உருக்கமாகப் பிரார்த்தனை செய்யப்படும். அதற்குப் பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பெருநாள் மகிழ்ச்சியையும் வாழ்த்து களையும் பரிமாறிக் கொள்வார்கள்.எல்லோருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..! ஈத் முபாரக்!
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“(நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும் இறைவன் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது)” – குர்ஆன் 2:185
The post பெருநாள் எனும் திருநாள் appeared first on Dinakaran.