தாம்பரம், மே 21: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் எறும்பு தின்னிகள் வைத்திருப்பதாக, சென்னை வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தாம்பரம் வனச்சரக அலுவலர் வித்யாபதி தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 எறும்பு தின்னிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் தாம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த 3 பேர் ஆந்திராவிற்கு சென்று எறும்பு தின்னிகளை வாங்கி வந்து, பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, வனச்சரக அதிகாரிகள் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும், கேரளாவில் இவர்களுக்கு யாருடன் தொடர்பு, ஆந்திராவில் யாரிடம் இருந்து எறும்பு தின்னிகளை வாங்கினார்கள், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு எறும்பு தின்னிகளை எப்படி கொண்டு வந்தனர், ரூ.40 லட்சம் ரூபாய் கொடுத்து எறும்பு தின்னிகளை வாங்க முயற்சித்த நபர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தாம்பரம் வனச்சரக அலுவலர் வித்யாபதி கூறுகையில், ‘‘எறும்பு தின்னிகள் கடத்தப்படுவது குறித்து சென்னை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் தகவலின் பேரில் தாம்பரம் வனச்சரகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு திருவொற்றியூரை சேர்ந்த 3 பேர் மற்றும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 4 பேரை, எறும்பு தின்னிகளை விற்க முயன்ற போது பெருங்களத்தூர் பகுதியில் வைத்து கையும் களவுமாக கைது செய்தோம்.
அவர்களது வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்த 2 எறும்பு தின்னிகளை பறிமுதல் செய்து தாம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் ஒரு முக்கிய புள்ளியின் பெயர் அடிபடுவதால் அவரை பிடிக்கும் வரை தற்போது பிடிபட்டுள்ள 4 பேரின் பெயர்களை வெளியிடவில்லை. எறும்பு தின்னிகள், இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. எறும்பு தின்னிகளின் செதில்களை வைத்து செருப்பு, பெல்ட் போன்றவை சீனாவில் தயாரிக்கப்பட்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல இதில் ஆண்மை குறைவு போன்ற சில பிரச்னைகளுக்கு மருத்துவ குணம் உள்ளது என நம்பிக்கை உள்ளதால் எறும்பு தின்னிகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்படுகிற எந்த ஒரு வனவிலங்காக இருந்தாலும், அது குறித்த தகவலை பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’’ என்றார்.
The post பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே ரூ.40 லட்சத்திற்கு விற்க முயன்ற எறும்பு தின்னிகள் பறிமுதல்: 4 பேரை பிடித்து வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.