மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் மதுரை மக்களுக்கு 24 மணி நேரம் மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என மாநகராட்சி ஆணையாளர் சித்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை-1, திட்டம்-2 மற்றும் காவேரி குடிநீர் திட்டங்கள் மூலம் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. மழையும் பெய்யாததால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, மக்கள் குடிநீருக்கும், வீட்டு தேவைக்கும் டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தினர். இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது போதுமான குடிநீர் விநியோகம் செய்து 24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1,609.69 கோடியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.