ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். 42 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை வகித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்த கொலைக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், எதற்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று, தமிழக ஆளுநரிடம் அளித்து, குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்துவோம். அவர்களை நாங்கள் நிச்சயம் வேட்டையாடப் போகிறோம். உள்துறை அமைச்சரை சந்தித்து, புலனாய்வில் கைதேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு இக்கொலை வழக்கை விசாரிக்குமாறும் வலியுறுத்துவோம். இந்த வழக்கை தமிழக அரசு, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.