பெரியார்… பெரியாறு

2 days ago 2

ஒரு நாட்டில் அரசியல் என்பது கொள்கைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபரையோ, விஷயத்தையோ மையப்படுத்தி ஒருபோதும் இருக்கக்கூடாது. அந்த வகையில் தமிழகத்தை மையப்படுத்தி இரு பிரச்னைகள் தீவிர அரசியலாக்கப்படுகிறது. ஒன்று பெரியார்; மற்றொன்று பெரியாறு. மது ஒழிப்பு, இட ஒதுக்கீடு முறையில் வேலைவாய்ப்பு, இந்தி எதிர்ப்பு, தீண்டாமை, மூட நம்பிக்கை, குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண் கல்வி, ஜாதி ஒழிப்பு, கைம்பெண் மறுமணம் என பெரியார் நடத்திய போராட்டங்களும், அவரது கொள்கைகளும் தமிழகம் மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியாவே பின்பற்ற வேண்டிய முக்கிய கொள்கைகள் ஆகும். பெரியாறு அணை பிரச்னையை தொடர்ந்து கிளப்பி வரும் கேரளாவில் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் ஒன்று போதுமே.. தமிழகத்திற்கு நிகராக கேரள மக்களும் அவரை வைக்கம் வீரர் என அழைப்பது ஏன்? 100 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் வைக்கம் நகரில் குறிப்பிட்ட பிரிவினர் தெருக்களில், ஆலயத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கான எதிர்ப்பு போராட்டங்களை பல தலைவர்கள் முன்னெடுத்தாலும், இறுதி வரை மக்களை வீடு, வீடாக சென்று திரட்டி போராடியவர் பெரியார். இதெல்லாம் குறுகிய அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு புரியாமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஆனால், தமிழகத்தில் பாஜ தலைவர்கள், சீமான் போன்றவர்கள், பெரியாரை பற்றி அவதூறாக பேசுவது மன்னிக்க முடியாத குற்றமாகவே கருதப்படுகிறது. இதுபோலவே, உண்மை நிலையை மறைத்து கேரள அரசு தொடர்ந்து பெரியாறு அணை தொடர்பாக பிரச்னையை கிளப்பி வருகிறது.

999 ஆண்டு குத்தகை எடுத்த தமிழகத்தை விட, பெரியாறு அணையில் அதிக அதிகாரத்தை கேரளா எடுத்துக் கொள்வது மிகவும் தவறானது. அணை பாதுகாப்பாக இல்லை. 136 அடி அல்லது அதற்கு கீழ்தான் தண்ணீர் தேக்க வேண்டும். 142 அடி தண்ணீர் தேக்கினால் அணை உடைந்து விடும். பல லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என அவதூறு வீடியோக்களையும், பிரபலங்கள் மூலமாக சர்ச்சை கருத்துக்களையும் தொடர்ந்து பரப்பி வருகிறது. தொடர்ந்து வழக்கும் தொடரப்பட்டு வருகிறது. அத்தோடு நில்லாமல் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்போவதாகவும் அவ்வப்போது மிரட்டி வருகிறது.

இதுதொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எந்த தடையும் கிடையாது என 3 முறை திட்டவட்டமாக கூறி விட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் ஆய்வின்படி, அணை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘அணை உடைந்து விடும் என்ற கருத்து, காமிக்ஸ் கதையின் கற்பனை போல உள்ளது’ என நேற்றுமுன்தினம் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், பெரியாறு அணையை ஆபத்தானது என்று கூறிக் கொண்டு கேரள அரசு தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.

இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்பது, பெரியாறு அணையை நம்பியுள்ள தென்மாவட்ட மக்களின் ‘பலமான’ கோரிக்கையாகும். பெரியார் மற்றும் பெரியாறு அணையின் உறுதி ஒருபோதும் சர்ச்சை கருத்துக்களால் உடைந்து போவதில்லை. அது காலம் கடந்தும் பலமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை வைத்து அரசியல் செய்ய நினைப்பது வீண் முயற்சியாகவே முடியும் என்பதை தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன…?

The post பெரியார்… பெரியாறு appeared first on Dinakaran.

Read Entire Article