சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெரியார் குறித்த பேச்சுக்கு சீமான் ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அதற்கு, ‘பெரியார் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குங்கள். என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை காட்டுகிறேன்’ என்று சீமான் கூறினார்.
இந்நிலையில், சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகையிட போவதாக அறிவித்தன. அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் கோபத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து தடுப்புகளை மீறி செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனர்.
இதனிடையே, சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட வந்த பெரியாரிய ஆதரவாளர்களை தாக்குவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 ஆண்கள், 30 பெண்கள் சேர்ந்து சீமான் வீட்டு முன்பு உருட்டுக்கட்டையுடன் திரண்டிருந்தனர். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஜனார்த்தன், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டுக்கட்டையுடன் திரண்ட 150 ஆண்கள், 30 பெண்கள் மற்றும் சீமான் மீது சட்டவிரோதமாக கூடுதல் (189), மிரட்டுதல் (351) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post பெரியாரிய ஆதரவாளர்களை தாக்க முயற்சி சீமான், நாதகவினர் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்கு appeared first on Dinakaran.