பெரியவர்களின் வழிகாட்டுதல் உன்னதமானது!

3 weeks ago 5

‘அந்த காலத்துல’ னு நம்ம வீட்டில் பெரியவங்க ஆரம்பிச்சவுடன் ஆளவிடுங்கனு ஓடிவிடுகிறோம். பல சமயங்களில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்பதற்குக்கூட நமக்கு மனமோ, நேரமோ இருப்பதில்லை. ‘உங்க காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற’னு சொல்லி அவர்களைத் தட்டிக்கழிக்கப் பார்க்கிறோம். பழங்காலப் பொருட்களுக்கு உள்ள மதிப்பு அந்தப் பழமையின் பூர்வாச்சாரியராக விளங்கும் பெரியோருக்கு இல்லை. அவங்களுக்கு என்ன பெரிசா தெரியப்போகுதுனு நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் நம் விஞ்ஞான அறிவால் சிறந்ததென்று இன்று அறியப்பட்ட பல விஷயங்களை அன்றே பழக்கத்தில் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள். ஏன், கொரோனா என்ற புதிய நோய்த் தொற்று வந்தபோதும்கூட அதைத் தடுக்கும் முயற்சியில் நம் முன்னோர்களின் பாரம்பரிய இயற்்கை மருத்துவத்தின் துணையை அல்லவா நாடினோம். இருந்தும் அறிவியல் பின்புலம் இல்லாதவர்கள் என்று அவர்களின் பல செயல்களை சடங்குகளாகவே பார்த்தோம்… பார்க்கிறோம்.

அறிவியல் தொழில்நுட்பங்களாலும் சோதனைகளாலும் முடியாது விடப்பட்ட பலவற்றைச் செய்து நம்மருகில் பாமரனாய் வாழ்ந்த… வாழும் பெரியவர்கள் நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அறிவு வங்கிகள். அவர்கள் வயதி(தா)ல் மூத்தவர்கள் மட்டும் அல்ல, அனுபவத்தால் முதிர்ந்தவர்கள். நாம் பார்க்காத உலகத்தையும் பார்த்தவர்கள்; நாம் எங்கிருந்து… எப்படி வந்தோம் என்பதன் ‘வரலாற்றுச் சான்றாக இருப்பவர்கள் தான் நம் முன்னோர்கள்’. நம்மில் பலர் நுனிப்புல் மேய்ச்சலில் கிடைக்கப் பெற்ற தகவலையும், முகநூல் போன்ற சமூக வலைத்தள அறிவையுமே முழுமையான ஞானம் என்றெண்ணி வாழ்க்கையை நகர்த்துகிறோம். முன்னேற்றம் என்ற பெயரில் நாம் முன்னோர்களை விட அறிந்துகொள்வதாய் எண்ணி, அவர்களைக்கூட அறிந்து கொள்வதில்லை.

நம் முன்னோர்களின் சீரிய சிந்தனைக்கு ஒரு உதாரணம், பல நேரங்களில், அவர்களின் சீரிய சிந்தனையை சிரியவையாகத்தான் பார்க்கிறோம். இதே ஒரு மேல்நாட்டவர் அதையே குறிப்பிடும்போது, அதை அரியவையாய்ப் பார்க்கின்றோம். எவ்வளவோ அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், பல வசதிகளை இன்றைய நாகரிக உலகம் நமக்குத் தந்திருந்தாலும், சுத்தமான காற்று, நஞ்சில்லா உணவு, மாசில்லாக் குடிநீர், ஆரோக்கியமான உடல், மனம் என்ற நம் அடிப்படை தேவைகளைப் பேசும்போது மட்டும் அதெல்லாம் அந்தக் காலத்துலதான்னு நம் பழமையை எண்ணி ஏங்குகிறோம். நீதி, நேர்மை, நாணயம் என்பதெல்லாம் அந்தக் காலத்தோட போச்சு; அது இந்த காலத்துல எடுபடாதுனு கூறுவதைக் கேட்டிருப்போம். அப்படியென்றால் நம் இந்தக் காலத்தின் முன்னேற்றம் தான் என்ன? முன்னோர்களால் பாதுகாப்பாய் நம் பின்வரும் சந்ததிகளுக்கு வழங்கிட அளித்த இந்தப் பூமியையே பாதுகாக்கக்கூட முடியாதது என்ன வளர்ச்சி. அறிவார்ந்த சமூகமாக வளர அறிவியல் மற்றும் விஞ்ஞான அறிவு மட்டும் போதாது, அறனறிந்த மூத்தோரின் துணையும், வழிகாட்டுதலும் அவசியமானது மட்டுமல்ல உன்னதமானது. அதுமட்டுமல்ல, நாம் பெரிதாக இழந்துவரும் எளிமையான வாழ்க்கையை அவர்களைவிட வேறு யாரிடம் கற்றுக்்கொள்வது (நவீன வசதியுடன் மினிமலிசம் பேசும் படவரி / வலையொளி மக்களிடமா…!!!). நவீனத்தைத் தேடும் முயற்சியில் நாம் புதைத்த நாகரிகம் மற்றும் பண்பாட்டின் விதைகளை உயிர்த்தெழ வைக்க நம்மிடம் உள்ள ஒரே ஆதாரம் நம் முன்னோர்கள்.

கொரோனா காலகட்டத்தில் மனித சமுதாயம் பல இழப்புகளைச் சந்தித்தது, அதில் குறிப்பாக நம் முதியவர்கள். சமுதாயத்தில் தனக்கென்று ஒரு இடம் தேடுவோர் மத்தியில், தனக்குள் சமுதாயத்தைப் பார்ப்பவர்கள் அவர்கள். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், நாட்டில் பல இடங்களில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) மற்றும் மருத்துவமனைப் படுக்கைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர், ‘தான் வாழ்ந்தாயிற்று, அடுத்த சந்ததி வாழவேண்டும்’ என்று தனக்குக் கொடுக்கப்பட்ட படுக்கையை விட்டுக்கொடுத்த உன்னத செயலை நீங்கள் படித்திருக்கலாம். இனி வாழ்ந்து என்ன பயன்னு கொடுத்தார் என்று சிலர் விமர்சித்தாலும், (மற்றவர்களுக்கு) பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, இறப்பையும் சிறப்பாக்கிச் சென்றார் அவர். நாம் நம் வாழ்க்கை(யில்)யைக் கடந்து போவது காலம் அல்ல; ஒரு சந்ததியின் அடையாளமாக இருந்துபோவது. அதனால் தான் நம் பெரியவர்கள் இறப்பதில்லை, அவர்கள் ‘காலமாகிறார்கள்’.

நம் வரலாற்றையும், பழக்கவழக்கங்களையும் இரண்டாம் நிலை ஆதாரங்கள் கொண்டுதான் அறிகிறோம். அது நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒருசிலர் உருவாக்கிய கலப்படமான கதைகளாகவும் இருக்கலாம். ஆனாலும் நம் முதன்மை ஆதாரங்களாக இருக்கும் முன்னோர்களின் அனுபவமொழியை அறிந்துகொள்ள மறுக்கிறோம். அவர்கள் ஏட்டுக்கல்வியில் தேர்ந்தவர்கள் அல்லர், வாழ்க்கை நெறிக்கல்வியின் பல்கலைக்கழகங்கள். ‘உலகின் தலைசிறந்த வகுப்பறை நம் முன்னோர்களின் காலடியில்’ என்பதை நம்மில் பலர் அவர்கள் இழப்புக்குப் பின்தான் உணர்கிறோம். அவர்களுடன் கூடாமல் நின்றதால், கேட்க மறந்த, கூறாது மறைந்த பொக்கிஷங்கள் பல. ஆகவே இன்றைய இளைய சமுதாயத்தினர் நம் முன்னோர்கள் சொல் கேட்டு முன்னோர்களை மதித்து முன்மாதிரியாக இருக்கப் பாருங்கள்! இருக்கும்போது அவர்கள் பெருமையை அறிந்து போற்றாது, இல்லாதபோது வெறுமையால் வாடி என்ன பலன்..!

The post பெரியவர்களின் வழிகாட்டுதல் உன்னதமானது! appeared first on Dinakaran.

Read Entire Article