பெரியபாளையம் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

23 hours ago 2

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகளை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம், வடமதுரை கூட்டுச்சாலை, பனப்பாக்கம், கன்னிகைப்பேர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் கம்பெனிகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும்போது, மாடுகள் ஒன்றோடொன்று சண்டை போடுகின்றன. மேலும் அங்கும் இங்குமாக ஓடி சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இச்சாலையை கடந்து செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் செல்லும்போது, எதிரே வந்த மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாட்டினை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடும் நடவடிக்கை பாயும்- கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள கால்நடைகள் சுற்றித் திரிவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு அவர்களது இடத்தில் கட்டி பராமரிப்பது அவரவரின் கடமையாகும். அவ்வாறு கால்நடைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை சாலைகளில் சுற்றி திரிவதுடன் சாலைகளிலேயே படுத்து கொள்கிறது. இதனால் வாகனங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகளும் விபத்துகளில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உரிமையாளர்களின் பராமரிப்பில் இல்லாமல் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அந்தந்த உள்ளாட்சித் துறை, ஆவடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துறை அலுவலர்கள் முறையாக கண்காணித்து அவற்றை கைப்பற்றி அருகில் உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கவும், சம்மந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோசாலையில் பராமரிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு பராமரிப்பு தொகை ரூ1000 கட்டாயம் வசூல் செய்யப்படும். 2வது முறையாக அதே உரிமையாளர்களின் கால்நடைகளை கைப்பற்றும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சிறை தண்டனை மற்றும் பெருமளவிற்கு குற்றவியல் நடவடிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர் மூலம் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பெரியபாளையம் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article