பெரியபாளையம் சாலையை ஆக்கிரமித்து மந்தைபோல் அமர்ந்திருக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

3 months ago 11

பெரியபாளையம்: பெரியபாளையத்தில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பஜார் பகுதி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகல் பாராமல் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், பெரியபாளையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மாடுகளால் பள்ளி-கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலையில் செல்லும்போது திடீரென மாடுகள் சீறி வருவதால் அவை முட்டிவிடுமோ என்ற பயத்திலேயே செல்ல வேண்டியுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பஜார் பகுதியில் கிடைக்கும் பொருட்களை தின்று, சாலையோர கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் மீது மோதுவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து வருகின்றனர். இதுபோன்று மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீபத்தில்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இந்த உத்தரவை மாட்டின் உரிமையாளர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் தங்களின் மாடுகளை அவிழ்த்து சாலையில் விடுகின்றனர். இதனால், மாடுகள் சாலையை ஆக்கிரமித்து அமர்ந்து மந்ைத போல் காட்சியளிக்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தும், அபராதம் விதித்தும், மாடுகளை கோ சாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பெரியபாளையம் சாலையை ஆக்கிரமித்து மந்தைபோல் அமர்ந்திருக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article