ஊத்துக்கோட்டை: பூச்சி அத்திப்பேடு ஊராட்சியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் தண்ணீர் மாசுபடுகிறது. அதனால் குப்பைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் பூச்சி அத்திப்பேடு கிராமம் உள்ளது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பூச்சி அத்திப்பேடு, வேப்பம்பட்டு, லட்சுமிநாதபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில், அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.
மேலும், ஊராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரை ஓரத்தில் கொட்டி வருகிறார்கள். இதனால், ஆற்று நீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குப்பைகளை ஆற்றங்கரையோரத்தில் கொட்டாமல் வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் விவசாயிகள், காய்கனி கடைகள், மளிகை கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு கடைகள் உள்ளது.
இந்த கடைகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால், குப்பைகள் அதிக அளவில் சேறுகிறது. இந்த குப்பைகளை ஊராட்சி மூலம் சேகரித்து இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரை ஓரத்தில் கொட்டுகிறார்கள். மேலும், பூண்டி ஏரியில் தண்ணீர் திறந்திருப்பதால் இங்குள்ள ஆற்றில் தண்ணீர் செல்கிறது. குப்பை கழிவுகளை ஆற்றின் கரையோரத்தில் கொட்டியிருப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் மாசடைகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
The post பெரியபாளையம் அருகே ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.