சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் கொலை செய்ய வந்த நபரை தப்பிக்க வைத்ததால் ஆத்திரத்தில் பிரபல ரவுடி வினோத்தை அரிவாளால் வெட்டியதாக கைதான 5 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ தெரு சேர்ந்த பிரபல ரவுடியான வினோத்(23). இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு உணவு அருந்திவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று வினோத் வசிக்கும் தெருவில் ஒருவரை தேடி கொண்டிருந்தனர். இதை பார்த்த ரவுடி வினோத், எங்க ஏரியாவில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வினோத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த வினோத்தை அவரது நண்பர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அரசு மருத்துவமனை தகவலின் படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடினர். அப்போது, பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ரவுடி வல்லரசு தனது ஆதரவாளர்களுடன் வந்து ரவுடி வினோத்தை வெட்டி சென்றது தெரியவந்தது. உடனே போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில் குற்றம் நடந்த 6 மணி நேரத்தில் ரவுடி வினோத்தை வெட்டிய ரவுடி வல்லரசு மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் ரவுடி வல்லரசுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு வல்லரசு சகோதரன் கலைவாணன் என்பவரை பெரும்பாக்கம் பகுதியில் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அதற்கு பழி வாங்கும் வகையில் ரவுடி வல்லரசு தனது நண்பர்களுடன் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள நபரை கொலை செய்யும் நோக்கில் நேற்று இரவு வந்தது தெரியவந்தது. கொலை செய்யக்கூடிய நபரை தேடிய போது, ரவுடி வினோத் சத்தம்போட்டு சம்பந்தப்பட்ட நபரை தப்பிக்க வைத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் வினோத்தை வெட்டியது தெரியவந்தது. கடந்த ஓராண்டாக கொலை செய்யும் வகையில் திட்டமிட்டு வந்த நேரத்தில் ரவுடி வினோத்தால், தனது சகோதரன் கலைவாணன் கொலைக்கு பழி வாங்க முடியாமல் போனதாக கைது செய்யப்பட்ட வல்லரசு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
The post சிந்தாதிரிப்பேட்டையில் பிரபல ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கொலை ெசய்ய வந்த நபரை தப்பிக்க வைத்ததால் வெட்டியதாக கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.