
சென்னை,
உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான் அவ்வப்போது கொடுக்கும் நேர்காணல்களில் சுவாரசியமான பதில்களை அளித்து வருகிறார்.
படங்களின் வெற்றிக்கு இவரது பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்காற்றும் நிலையில், இவரை 'இசைப்புயல்' என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இளம் ரசிகர்கள் இவரை 'பெரிய பாய்' என்ற புனைப்பெயர் கொண்டும் அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.படத்தின் முதல் பாடல், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

புரமோஷன் பணியில் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரகுமான் நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்க்காணலில் ஏ.ஆர். ரகுமானை 'பெரிய பாய்' என்ற புனைப்பெயருடன் தொகுப்பாளர் அழைத்தார். இதனைக் கேட்டு சிரித்த ஏ.ஆர். ரகுமான், "பெரிய பாய், சின்ன பாய் என்று அழைப்பதற்கு, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? இந்த பெயர் பிடிக்கவில்லை" என்று நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமானின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.